அமித் ஷா பெயரை கேட்டாலே தி.மு.க.,வுக்கு நடுக்கம்: பா.ஜ.,
அமித் ஷா பெயரை கேட்டாலே தி.மு.க.,வுக்கு நடுக்கம்: பா.ஜ.,
UPDATED : ஜூலை 13, 2025 03:24 AM
ADDED : ஜூலை 13, 2025 03:17 AM

மதுரை : 'மத்திய அமைச்சர் அமித் ஷா பெயரை கேட்டாலே தி.மு.க.,வுக்கு நடுக்கம் வந்து விடுகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
அமித் ஷா மதுரைக்கு வந்து சென்ற பின், தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டில்லியில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் ஏறுகிறார் என்று சொன்னாலே தி.மு.க.,வினருக்கு நடுக்கம் வந்து விடுகிறது; அமித் ஷா பெயரை கேட்டாலே நடுங்குகின்றனர்.
தமிழகத்தில் 'லாக் அப்' மரணம், கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது. இதையெல்லாம், தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை.
வேங்கைவயல் பிரச்னைக்கு, கூட்டணி கட்சியாக இருப்பதாலேயே வி.சி., தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இல்லாததால், அதை பற்றி பேச வேண்டியதில்லை.
வரும் சட்டசபை தேர்தலில், கடவுள் முருகன் சூரசம்காரம் செய்வார். மதுரை எங்களுக்கு ராசியான மண். தி.மு.க., மதுரையில் பொதுக்குழு நடத்திய பின், 22 ஆண்டுகள் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், பா.ஜ., நடத்திய அனைத்து கூட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தில் விரைவில் மீனாட்சி அம்மனின் ஆட்சி மலரும். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கண்ணகிக்கு நீதி கிடைத்த மண்ணில், நாங்களும் நீதி கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- ராம.சீனிவாசன்,
பொதுச்செயலர்,
தமிழக பா.ஜ.,