கிழக்கு இடைத்தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கிய தி.மு.க.,
கிழக்கு இடைத்தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கிய தி.மு.க.,
ADDED : ஜன 07, 2025 07:38 PM
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை முன்னதாகவே துவக்கி, வாக்காளர் விபரங்களை முழுமையாக, தி.மு.க., சேகரித்து முடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் இறந்ததால், பிப்., 5ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை எதிர்பார்த்த தி.மு.க., முன்னதாகவே பணிகளை தொடங்கி விட்டது.
தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த டிச.,14ல் இளங்கோவன் இறந்தார். இதனால் தொகுதி காலியானதாக உடனே அறிவிக்கப்பட்டது. டில்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். அதனால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட மறு நாளே, தேர்தலை நோக்கி பணிகளை துவக்கி விட்டோம்.
கடந்த 10 நாட்களில் வார்டு, பகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் வாயிலாக வீடு வீடாக சென்று சரி பார்த்துள்ளோம்.
மொத்த வாக்காளர் எவ்வளவு, அவர்களில் ஆண், பெண், வெளியூரில் உள்ளவர்கள், சமீப காலத்தில் இறந்தவர்கள், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், அவர்களுடைய விபரம், போன் எண்ணை பெற்றுள்ளோம். ரேஷன் கார்டில் உள்ள பெயர் விபரப்படி, கார்டு எண்ணுடன் பட்டியலை பெற்றுள்ளோம். தவிர கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஓட்டு போடாதவர் விபரத்தை தனியாக எடுத்துள்ளோம். அவர்களை இம்முறை கட்டாயம் ஓட்டளிக்க செய்யும் பணியை துவங்கி உள்ளோம்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தலா, 600 முதல், 1,100 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 150 முதல், 400 பேர் வரை ஓட்டுப்போடாமல் இருந்ததால், அவர்களை தொடர்ந்து அணுக திட்டமிட்டுள்ளோம். அ.தி.மு.க., புறக்கணித்தாலும், போட்டியிட்டாலும், அவர்களுக்கு சாதகமான, பாதகமான வார்டு, கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டு குறைவான ஓட்டுச்சாவடி விபரங்களையும் தனித்தனியாக எடுத்துள்ளோம்.
எந்தந்த வார்டுகளில் தி.மு.க.,வுக்கு குறைவான ஓட்டுக்கள் ஏற்கனவே பதிவாகி உள்ளதோ, அதையெல்லாம் கூட்டுவதற்கான பணிகள் துவங்கி விட்டோம்.
தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டதும், இப்பணிகள் இன்னும் விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

