ADDED : ஜூன் 11, 2025 02:08 AM

சிவகாசி: ''தொடர்ந்து இரண்டாவது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு,'' என, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க., 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது:
அ.தி.மு.க., கூட்டணியை கண்டு தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தி.மு.க., நிர்வாகிகளே அக்கட்சிக்கு ஆப்பு வைக்க உள்ளனர்.
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள், 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் இருந்தால், அவர் அங்கு இருக்க மாட்டார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி என்று எங்கேயும் யாரும் சொல்லவில்லை.
தமிழகத்தில், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி வரும். ஆன்மிகத்தின் அடையாளமான கட்சியே அ.தி.மு.க., தான். தி.மு.க., சமூக நீதிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் போராடுவதாக பொய் சொல்லி வேஷம் போடுகிறது.
தி.மு.க., வந்த உடனே என்மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. நேர்மையாக வழக்குகளை எதிர்கொள்கிறேன். எதற்காகவும், ஓடி ஒளிபவன் நானல்ல. நான் யாரையும் ஏமாற்றியது கிடையாது. என்மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். எத்தனை வழக்குகள் போட்டாலும், அஞ்சாமல் அரசியல் பணி செய்வேன். அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைப்பேன். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.