வட மாவட்டங்களில் வெற்றி பெற தி.மு.க., அதிரடி 'வியூகம்'; அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கீடு
வட மாவட்டங்களில் வெற்றி பெற தி.மு.க., அதிரடி 'வியூகம்'; அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கீடு
ADDED : மே 20, 2025 12:52 AM

வன்னியர்கள் அதிகம் உள்ள வட மாவட்டங்களில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில், மாநிலம் முழுதும், 7 மண்டலங்களாக பிரித்து, அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.
இதில் முதன்மை நிலைய செயலாளர் அமைச்சர் நேரு, துணை பொதுச்செயலாளர் ராசா, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் வேலு, சக்கரபாணி, தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
தற்போது 8வது மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிமிக்கப்பட்ட 7 மண்டல பொறுப்பாளர்களில், வட மாவட்டங்களில் அதிகம் உள்ள வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காமல் புறக்கணித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தி.மு.க.,விற்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த பிரச்னை கட்சியின் தலைமைக்கு சென்றதும், 8வது பொறுப்பாளராக அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம், ஏற்னவே தர்மபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த நிலையில், தற்போது கடலுார் (கிழக்கு), விழுப்புரம் மாவட்டம் (மத்தியம், தெற்கு, வடக்கு), காஞ்சிபுரம் (கிழக்கு) ஆகிய 3 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (4 சட்டசபை தொகுதிகள்), விழுப்புரம் தெற்கு (2 சட்டசபை தொகுதிகள்) மத்திய மாவட்டம் (2 சட்டசபை தொகுதிகள்), வடக்கு மாவட்டம் (3 சட்டசபை தொகுதிகள்) அடங்கியுள்ளது.
இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து மொத்தம் 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அமைச்சர் கூட இல்லாத நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான் என 2 அமைச்சர்கள் பதவியில் இருந்தனர்.
அவர்களது பதவி பறிக்கப்பட்டதில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேறு யாரையும், கட்சி தலைமை அமைச்சராக நியமிக்கவில்லை. இதற்கிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்களில், வேலு, விழுப்புரம் மாவட்டத்திற்கும் சேர்த்து பொறுப்பாளராக இருப்பார் என கூறப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ள வேலுவை, செஞ்சியில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செயப்பட்டிருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தகவல் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, சந்திப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு, பொன்முடியின் எதிர் அணியில் உள்ள வேலு பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என பொன்முடியின் எதிர்கோஷ்டி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கட்சி தலைமை திடீரென அமைச்சர் பன்னீர்செல்வத்தை பரிந்துரை செய்துள்ளது.
-நமது நிருபர்-