இது உங்கள் இடம்: தி.மு.க.,வின் 'பி டீம்' அ.தி.மு.க.,
இது உங்கள் இடம்: தி.மு.க.,வின் 'பி டீம்' அ.தி.மு.க.,
UPDATED : பிப் 20, 2024 12:54 AM
ADDED : பிப் 20, 2024 12:52 AM

எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வுக்கு முரசொலி பத்திரிகை போல, பா.ஜ.,வின் முரசொலி, 'தினமலர்' நாளிதழ் என்று விமர்சித்து, மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்.
தினமலர் நாளிதழ் என்றும் நடுநிலையுடன் தான் செய்திகளை வெளியிடுகிறது. 'காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்' என்பதை போல இவர் பேசுகிறார்.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பங்காளிகள் என்று கூறியது தினமலர் நாளிதழோ, பா.ஜ.,வோ அல்ல; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் முனுசாமி தான்.
அரசியல் களத்தை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு சில ஆண்டுகளாகவே அ.தி.மு.க., என்பது, தி.மு.க.,வுக்கு, 'பி' டீமாக இருந்து வருவது நன்றாக தெரியும்.
தி.மு.க., எப்போதும் காங்., அல்லது பா.ஜ., போன்று ஏதாவது தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்கும்; ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க., கட்சி பா.ஜ.,வின் அடிமை என்று விமர்சிக்கும்.
சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில், 'அண்ணாமலையின் பாத யாத்திரைக்கு பின் பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, தமிழகத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும்' என்றே கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., மட்டும் பா.ஜ.,வுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும். இதனால், அ.தி.மு.க.,வில் சிலருக்கு மத்தியில் அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம். இது, முதல்வர் ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் நன்றாக தெரியும்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால், வளமான எதிர்காலம் இருக்கும் என்று தெரிந்த போதும், தனித்து நின்று, தான் தோற்றாலும் பரவாயில்லை... நம் பங்காளி கட்சி தானே வெற்றி பெறுகிறது. நம் எதிரிக் கட்சியான பா.ஜ., தமிழகத்திற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில், பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பங்காளிக்காக தன் சொந்த பிள்ளையை காவு கொடுக்கும் பரந்த மனப்பான்மை யாருக்கும் வராது.
பழனிசாமி எடுக்கும் முடிவுகள், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை பாழாக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

