மதுவிலக்கில் தி.மு.க.,வின் முகமூடி கிழிந்துள்ளது:- ராமதாஸ்
மதுவிலக்கில் தி.மு.க.,வின் முகமூடி கிழிந்துள்ளது:- ராமதாஸ்
ADDED : அக் 26, 2024 06:54 AM
சென்னை : 'மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தி.மு.க.,வின் முகமூடி கிழிந்துள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
போதை தரும் மது உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசை காரணம் காட்டி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் தி.மு.க., அரசின் முகமூடியை இத்தீர்ப்பு கிழித்துள்ளது.
மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, மது வணிகம் செய்து, ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மது ஆலை உரிமங்களை வழங்கியவர்கள், மதுவிலக்கை அமல்படுத்த மட்டும், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். இது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
மதுவால் மட்டும், தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
தேசிய அளவில் அதிக விபத்துகள், அதிக தற்கொலைகள், அதிக மனநல பாதிப்புகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இனியும் மத்திய அரசை காரணம் காட்டிக் கொண்டிருக்காமல், தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.