ஜாமின் உத்தரவாதம் விவகாரம் பழைய வக்கீல் ஒப்புதல் வேண்டாம்
ஜாமின் உத்தரவாதம் விவகாரம் பழைய வக்கீல் ஒப்புதல் வேண்டாம்
ADDED : அக் 22, 2024 04:03 AM
சென்னை : 'ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யும்போது, பழைய வழக்கறிஞர் ஒப்புதலை நீதிமன்றம் கோர வேண்டியதில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 82 நாட்கள் சிறையில் உள்ளதாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததாலும், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அவரது ஜாமின் உத்தரவாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர் தரப்பில் முன்பு ஆஜரான வழக்கறிஞர், அதிக தொகை கேட்டதால் வழக்கறிஞரை மாற்றி விட்டார்.
தற்போது, ஜாமின் உத்தரவாத மனுவில், பழைய வழக்கறிஞரின் ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டால் மட்டுமே, ஜாமின் உத்தரவாதம் ஏற்க முடியும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பழைய வழக்கறிஞரின் ஆட்சேபனை இல்லை என்று ஒப்புதல் பெறாமல், ஜாமின் உத்தரவாதத்தை ஏற்கும்படி கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'மனுதாரர் தரப்புக்கு ஏற்கனவே ஆஜரான வழக்கறிஞரின் ஒப்புதலை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்,ஜாமின் உத்தரவாதத்தை மட்டுமே, கோவை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.