காற்றாலைகளால் பருவ மழையில் பாதிப்பா? ஆய்வு செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
காற்றாலைகளால் பருவ மழையில் பாதிப்பா? ஆய்வு செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஏப் 24, 2025 06:15 AM
ADDED : ஏப் 23, 2025 11:15 PM

கோவை, ; 'கோவையில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளால் மழைப்பொழிவு குறைந்துள்ளதா என ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு, மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இது, வரவேற்கத்தக்கது. அதே சமயம் விவசாய விளைநிலங்களுக்கு தேவையான மழைப்பொழிவு குறைவதாக விவசாயிகள் எண்ணுகின்றனர். அதனால், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து உண்மை நிலையை தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி ரங்கநாதன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவமழையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலம் தவறி பெய்தல், முன்கூட்டியே பருவமழை துவங்குதல் என, ஆண்டுக்கு ஆண்டு மழைப்பொழிவில் மாற்றம் காணப்படுகிறது.
அதற்கேற்ப விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் சொல்லும் தகவலும் பல நேரங்களில் பொய்த்து விடுகிறது. மழை எப்போது பெய்யும்; வெயில் எப்போது வாட்டும் என்று விவசாயிகளால் யூகிக்க முடியவில்லை.
சில ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
அபரிமிதமான உயரத்தில் மிகப்பெரிய காற்றாடிகளை கொண்டுள்ளன. இதன் காரணமாக, காற்று வரும் திசை மாறிச் செல்வதால், தெற்குப்பகுதிக்கு மட்டும் மழைப்பொழிவு குறைகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால், கோவை மாவட்டத்தில் வடக்கு, மேற்கு கிழக்கு பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு உள்ளது. தெற்குப்பகுதியில் காற்றாலைகள் இருப்பதால், மழைப்பொழிவு குறைந்திருப்பதாக சந்தேதிக்கிறோம்.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை இணைந்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, மழைப்பொழிவு இல்லாததற்கான காரணத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.