UPDATED : மார் 25, 2024 06:09 PM
ADDED : மார் 25, 2024 06:08 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 27) முடியவுள்ளது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் தற்போது சூடுபிடித்துள்ளது.
இன்று பங்குனி உத்திரம் என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் இன்றே வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்கள், பா.ஜ., மற்றும் திமுக.,வின் முக்கிய வேட்பாளர்கள் என பலரும் தேர்தல் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
* திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.21.92 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.14.03 கோடி அசையும் சொத்து, ரூ.7.89 கோடி அசையா சொத்து; தனது குடும்பத்துக்கு ரூ.5.13 கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
* கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7.63 கோடி சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அதில் ரூ.6.99 கோடிக்கு அசையா சொத்துகளும், ரூ.64 லட்சத்திற்கு அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு எந்தவித கடனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.45.71 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரூ.5.51 கோடிக்கு அசையும் சொத்து, ரூ.40.21 கோடிக்கு அசையா சொத்து; ரூ.8.06 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

