பதவி உயர்வு வழங்காததால் ஆண்டுக்கு ரூ.15 கோடி மிச்சம் டாக்டர்கள் சோக கிண்டல்
பதவி உயர்வு வழங்காததால் ஆண்டுக்கு ரூ.15 கோடி மிச்சம் டாக்டர்கள் சோக கிண்டல்
ADDED : ஏப் 25, 2025 12:25 AM
சென்னை:'மருத்துவ பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய் வரை, அரசு மிச்சப்படுத்தி வருகிறது' என, அரசு டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 15,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட, 354வது அரசாணையின்படி, ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு, அவர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், அரசாணையை நிறைவேற்ற, அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதனால், மருத்துவ பேராசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய, பதவி உயர்வு பாதிக்கப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டிருந்தால், 1,600க்கும் மேற்பட்ட மருத்துவ பேராசிரியர்கள் பலன் பெற்று இருப்பர்.
அரசாணையை நிறைவேற்றாததால், 503 பேராசிரியர்கள், 450 இணைப் பேராசிரியர்கள், 600 உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பதவி உயர்வால் மருத்துவ பேராசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் அடிப்படையில், ஆண்டுக்கு, 15 கோடி ரூபாயை அரசு மிச்சப்படுத்தி வருகிறது.
மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்களுக்கு முறையான ஊதியம், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.