நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு புகார்
நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு புகார்
ADDED : நவ 14, 2024 10:27 PM
சென்னை:'அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள், நர்ஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்காதது தான், இது போன்ற தாக்குதலுக்கு காரணமாக உள்ளது' என, டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஒரு நோயாளிக்கு குறிப்பிட்ட நேரம் கொடுத்து பேசும் அளவிற்கு, அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு நேரமில்லை. கொரோனாவுக்கு முன், ஒரு நாளைக்கு, 40 முதல், 60 நோயாளிகள் பார்த்து வந்த இடத்தில் தற்போது 200 பேரை வரை, ஒரு டாக்டர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.
அதேபோல, கிண்டி மருத்துவமனை துவங்கிய போது, 600 நோயாளிகளுக்கு, 60 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது 3,000 நோயாளிக்கு, அதே அளவிலான டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதனால், டாக்டர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் அதிகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவன பரிந்துரைப்படி, 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். அதன்படி, 80,000 அரசு டாக்டர்கள் இருப்பது அவசியம். ஆனால், 23,000 டாக்டர்கள் தான் இருக்கின்றனர். இப்பிரச்னைக்கு அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால், கூடுதலாக 20,000 டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இம்மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள முதுநிலை பயிற்சி டாக்டர்கள், கிண்டிக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால், நோயாளிகளுக்கு சீனியர் டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர். அவர்களுக்கு உதவியாக ஜூனியர் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும்.
மேலும், மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி ஓய்வு பெற்ற நிலையில், பதவி நீட்டிப்பில் இருக்கிறார். தற்போது பணியில் உள்ள டாக்டர் ஒருவரை, இயக்குனர் பதவியில் அமர்த்தினால் மட்டுமே, சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.