மருத்துவர்கள் போலி விளம்பரம் செய்தால் போலீசில் புகார் அளிக்கலாம்: ஐகோர்ட்
மருத்துவர்கள் போலி விளம்பரம் செய்தால் போலீசில் புகார் அளிக்கலாம்: ஐகோர்ட்
ADDED : நவ 09, 2024 10:27 PM
சென்னை:'போலி விளம்பரங்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் வெளியிட்டால், மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம்; போலீசில் புகார் அளிக்கலாம்; ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், மங்கையர்க்கரசி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
பத்திரிகைகள், 'டிவி'க் களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விளம்பரங்கள், பொது மக்களை திசை திருப்புகின்றன.
இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. போலி மருத்துவ விளம்பர நிகழ்ச்சிகளுக்கு, 'டிவி' ஊடகங்களில், 30 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இதுபோன்ற போலி மருத்துவர்கள், போலி மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் அமர்வு' முன், விசாரணைக்கு வந்தது. பொதுப்படையாக, ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க, முதல் பெஞ்ச் மறுத்து விட்டது.
ஒவ்வொரு விளம்பரத்துக்காகவும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், அமல்படுத்தக்கூடிய உத்தரவுகளை தான் பிறப்பிக்க முடியும் எனவும், முதல் பெஞ்ச் தெரிவித்தது.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், மேலும் கூறியிருப்பதாவது:
விதிகளுக்கு முரணாக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில் விளம்பரங்களை வெளியிட்டால், உரிய அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். ஒவ்வொரு விளம்பரமும் திசை திருப்பும் வகையில் உள்ளதா என்பதை, ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால், பொது மக்களுக்கு பாதகமான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பதை எதிர்பார்க்கலாம்.
போலி விளம்பரங்களை மருத்துவரோ, மருத்துவமனையோ வெளியிட்டால், மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.
போலி மருத்துவர்கள், ஊடகங்களில் விளம்பரம் செய்தால் போலீசில் புகார் அளிக்கலாம்; அதை போலீசார் விசாரிக்க வேண்டும். போலி விளம்பரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
எனவே, ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, பொதுப்படையாக உத்தரவிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.