தமிழகம் முழுதும் டாக்டர்கள் போராட்டம் மருத்துவமனைகளில் பாதியாக குறைந்தது நோயாளிகள் வருகை
தமிழகம் முழுதும் டாக்டர்கள் போராட்டம் மருத்துவமனைகளில் பாதியாக குறைந்தது நோயாளிகள் வருகை
ADDED : நவ 15, 2024 02:54 AM

சென்னை:தமிழகம் முழுதும், அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. இதனால், பெரியளவில் பாதிப்பில்லாமல் மருத்துவ சேவை தொடர்ந்தது.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் டாக்டர் பாலாஜியை, நோயாளியின் மகன் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. இதை கண்டித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தினர், அவசர சிகிச்சையை தவிர்த்து மற்ற சேவைகளை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
அதேபோல, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், போராட்டத்தை வாபஸ் பெற்றாலும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தர்ணா போராட்டம், ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
டாக்டர்களின் போராட்டத்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, நேற்று கணிசமாக குறைந்தது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும், பொது பிரிவில் தினமும் 3,000 புறநோயாளிகள் வரும் நிலையில், நேற்று 1,500க்கும் குறைவானவர்களே வந்துள்ளனர்.
அதேபோல், மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று கணிசமாக குறைந்தது. இதனால், மருத்துவ சேவை பெரியளவில் பாதிக்கப்படவில்லை.
அதேநேரம், டாக்டர்கள் போராட்டம் காரணமாக, பல மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறுகையில், “டாக்டரை தாக்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு, அரசு நடவடிக்கை எடுப்பதுடன், டாக்டர்கள், நர்ஸ்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும்,” என்றார்.
அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதுபோன்ற சம்பவத்தில், காவல் துறையில் மருத்துவ பாதுகாப்பு படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
“அதன்படி, 1,040 போலீசார் மருத்துவ பாதுகாப்பு படையில் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டது; ஆனால், அமல்படுத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்,” என்றார்.
நலமுடன் இருக்கிறேன்
நான் நலமுடன் உள்ளேன். தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு தையல் போட்டுள்ளனர்; 'ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள் கொடுத்துள்ளனர். எனக்கு, 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டு உள்ளதால், அதன் செயல்பாட்டை சோதனை செய்தனர். இன்னும் பல பரிசோதனைகள் செய்துள்ளனர். எவ்வித பிரச்னையும் இல்லாமல் நலமுடன் இருக்கிறேன்.
- டாக்டர் பாலாஜி,
புற்றுநோய் துறை தலைவர்
அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி, சென்னை
இன்று முதல் இயல்பு நிலை
டாக்டர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, தனி ரூமிற்கு மாற்றப்பட்டு நலமுடன் உள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு நேற்று செயல்படவில்லை. அவசர சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது. இன்று முதல் வழக்கமான சிகிச்சைகள் துவங்கும்.
-டாக்டர் பார்த்தசாரதி,
இயக்குனர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி, சென்னை
போராட்டம் வாபஸ்
டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். அமைச்சர் சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டாத நிலையில், நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், கோரிக்கையை அரசு நிறைவேற்ற ஒரு மாதம் அவகாசம் அளித்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, அச்சங்கத்தின் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.