ADDED : மார் 01, 2024 12:01 AM
சென்னை,:அரசு டாக்டர்களின் சம்பள கோரிக்கை குறித்த மனுவை, ஆறு வாரங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள்பிள்ளை, டாக்டர் ஜெயகுமார் உள்ளிட்ட எட்டு டாக்டர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது, எங்களுக்கு சம்பள முரண்பாடு அதிகமாக உள்ளது. இந்த முரண்பாட்டை களைய, 2009 அக்டோபரில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த அரசாணையை, அரசு அமல்படுத்தவில்லை. கண்டிப்புடன் அமல்படுத்த, அரசுக்கு பல முறை மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அரசின் கூடுதல் செயலர் தலைமையில், பணிக்குழு ஒன்றை அரசு அமைத்தது.
இந்தக் குழுவில், மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணி இயக்குனர், பொது சுகாதாரத் துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த, 2021 பிப்ரவரியில், இக்குழு தன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. எங்களின் கோரிக்கை மனுவை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் டி.கவுதமன், வழக்கறிஞர் பி.பச்சையப்பன் ஆஜராகினர்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமண்லால் ஆஜராகி, ''பணிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக துறை பரிசீலிக்கிறது. 2021ல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை,'' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில் 'நீண்ட நாட்களாக, மனுதாரர்களின் கோரிக்கை மனு நிலுவையில் உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அப்போது நிறுத்தி வைத்துள்ளனர்.
'தற்போது, மனுதாரர்களின் கோரிக்கை மனுக்களை அரசு பரிசீலிக்கலாம். எனவே, பணிக்குழுவின் பரிந்துரைப்படி, கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறிஉள்ளார்.

