பெண் நாய்களுக்கு கருத்தடை எளிதல்ல என்கின்றனர் டாக்டர்கள்
பெண் நாய்களுக்கு கருத்தடை எளிதல்ல என்கின்றனர் டாக்டர்கள்
ADDED : ஆக 31, 2025 06:29 AM
சென்னை: 'ஆண் நாய்களுக்கு உடனடியாக கருத்தடை செய்யலாம். பெண் நாய்களுக்கு, அவற்றின் ஹார்மோன் சுழற்சியை பொறுத்து குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே கருத்தடை செய்ய முடியும்' என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:
ஆண் நாய்களுக்கான கருத்தடை செயல்முறையில், அதன் விரைகள் அகற்றப்படுகின்றன. விரைகள் வெளிப்புறத்தில் உள்ளதால், வெளிப்புற அறுவை சிகிச்சை வாயிலாக, அவற்றை எளிதாக அகற்ற முடிகிறது. அத்துடன் நாய்கள் விரைவாகவும் குணமடைந்து விடும்.
பெண் நாய்களுக்கான கருத்தடையில், கருமுட்டை உற்பத்தி செய்யும் பகுதி அகற்றப்படுகிறது; எல்லா நேரமும், இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு இரு முறை மட்டுமே, பெண் நாய்களுக்கு சினைக்காலம் வரும். அந்த சமயத்தில் தான், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
அதை கண்டறிய, நாயின் ரத்தத்தில் உள்ள, 'ஹார்மோன்' அளவு மதிப்பீடு செய்யப்படுகிறது. அது உறுதியானதும், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். பெண் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய இரண்டு மணி நேரமாகும்.
இது, உட்புற அறுவை சிகிச்சையாகும். ஏனெனில், வயிற்று பகுதியை கிழித்து, கருத்தடை செய்யப்படுகிறது. இதனால், ஆண் நாய்களை விட பெண் நாய் குணமடைய, அதிக நாட்களாகும்.
பெண் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. அதேநேரம் உட்புற அறுவை சிகிச்சை என்பதால், கீறல் இடத்தில் தொற்று அபாயம் ஏற்படலாம். எனவே, முறையாக பராமரிப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

