ADDED : மார் 10, 2024 11:28 PM
உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு டாக்டர் கையெழுத்தை போலியாக போட்டு ஆதாரை திருத்த முயன்ற தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தாஜூதீனை 54, போலீசார் கைது செய்தனர்.
தாஜூதீன் அரசு சான்றிதழ்கள் வாங்கித்தரும் பணிகளை செய்து வந்தார். கம்பத்தை சேர்ந்த முனீஸ்வரன், தனது ஆதாரில் முகவரியை திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்குரிய ஆவணத்தை 'பிரின்ட் அவுட்' எடுத்தார்.
அதில் கெஜட்டட் ரேங்க் அதிகாரி கையெழுத்து இட்டு சான்றளிக்க வேண்டும். அதற்காக தாஜூதீனை தொடர்பு கொண்டுள்ளார். அவர் அந்த சான்றிதழில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து, தற்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் திவ்யாவின் கையெழுத்தை போலியாக போட்டு 'ரப்பர் ஸ்டாம்ப்' வைத்து கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் டாக்டர் திவ்யாவிற்கு தெரிந்துள்ளது. அவரது புகாரில், உத்தமபாளையம் போலீசார் தாஜூதீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

