ADDED : ஜூலை 09, 2025 02:06 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
பணி நிரந்தரம் கோரி, போராட்டத்திற்கு புறப்பட்ட, பகுதிநேர ஆசிரியர்கள், தி.மு.க., அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2021 தேர்தலின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'ஆட்சி அமைந்ததும், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை தி.மு.க., நிறைவேற்றும்' என்று படித்த துண்டுச்சீட்டு இப்போது தொலைந்து விட்டதா.
சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு, பகுதிநேர ஆசிரியர்களை, தி.மு.க., அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது. அதே போல், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் பாபு, கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.
ஆனால், வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம். அரசு மருத்துவமனையில், அதுவும் டாக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை. இதற்கு சட்டம் - ஒழுங்கை நிர்வகிக்க திராணியற்ற முதல்வரே பொறுப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

