ஆபத்தை ஏற்படுத்தும் ஆப்ரிக்க வகை நத்தை வெறும் கையால் தொட்டால் தொற்று நிச்சயம் டாக்டர்கள் எச்சரிக்கை
ஆபத்தை ஏற்படுத்தும் ஆப்ரிக்க வகை நத்தை வெறும் கையால் தொட்டால் தொற்று நிச்சயம் டாக்டர்கள் எச்சரிக்கை
ADDED : டிச 18, 2025 03:33 AM

சென்னை: 'மழை மற்றும் குளிர் காலங்களில், வீடுகளுக்கு அருகே காணப்படும் ஆப்ரிக்க வகை பெரிய நத்தைகளை தொடுவதால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்' என, அரசு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் முழுதும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில், ஆப்ரிக்க வகை பெரிய நத்தைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நத்தைகளால் நேரடி பாதிப்பு இல்லையென்றாலும், அவற்றை வெறும் கைகளால் தொடுவதன் வாயிலாக, மூளைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என, அரசு டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, அரசு பொது நல மருத்துவர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
ஆப்ரிக்க ராட்சத நத்தை, 'லிசாசாட்டினா புலிக்கா' என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இது, 500 வகையான தாவரங்களையும், கழிவுகளையும் உட்கொள்கிறது. இரு பாலினத்துக்கான இனப்பெருக்க உறுப்புகளும், இதில் ஒருசேர அமைந்துள்ளன.
ஒரே நேரத்தில், 500 முட்டைகள் இடும். இந்த நத்தைகள், ஐந்தாண்டுகள் வரை உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது.
பிரிட்டன் ஆய்வாளரால், 19ம் நுாற்றாண்டில் இந்தியா எடுத்து வரப்பட்ட ஆப்ரிக்க நத்தைகள், தற்போது பல இடங்களில் பெருகி, விவசாய பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சென்னை போன்ற நகரப் பகுதிகளிலும் இந்த நத்தைகள் காணப்படுகின்றன.
சமூகத்தில், 'ஆஞ்சியோ ஸ்டராங்கைலஸ்' என்ற ஒட்டுண்ணி, எலிகளிடையே தொற்றை ஏற்படுத்தி, அதன் உடலில் பெருக்கமடையும். எலிகளின் கழிவு வாயிலாக, ஒட்டுண்ணி வெளியேற்றப்படுகிறது.
ஆப்ரிக்க நத்தைகளின் பிரதான உணவாக, எலிக் கழிவு இருப்பதால், அதன் வாயிலாக ஒட்டுண்ணிகளை கடத்துகின்றன.
ஒட்டுண்ணி பாதித்த நத்தை நகர்ந்து செல்லும்போது, அதன் ஜவ்வில் இருந்து வெளியேறும் நீரிலும் தொற்று பரவியிருக்கும். அதை தொட்ட கைகளால், மூக்கு, வாய் பகுதிகளை தொடும்போது, 'ஆஞ்சியோ ஸ்ட்ராங்கைலஸ்' பாதிப்பு நமக்கு பரவுகிறது; இது, காய்ச்சல், கழுத்து வலி, மயக்கம், குமட்டல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தொடர்ந்து, 'ஈசினோபிலிக் மெனிங்கோ என்சபலிட்டிஸ்' என்ற மூளைக் காய்ச்சலையும் ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகி விடும்.
எனவே, வீடு அருகாமையில் காணப்படும் நத்தைகளை, வெறும் கையால் தொட்டால், உடனடியாக சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும். வீடுகளில் அவை தென்பட்டால், நேரடியாக கை படாதவாறு அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

