அப்துல் கலாம் பயன்படுத்திய ஆவணங்கள் தேசிய ஆவண காப்பகத்தில் ஒப்படைப்பு
அப்துல் கலாம் பயன்படுத்திய ஆவணங்கள் தேசிய ஆவண காப்பகத்தில் ஒப்படைப்பு
ADDED : ஏப் 29, 2025 07:09 AM

ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயன்படுத்திய ஆவணங்களை தேசிய ஆவண காப்பக அதிகாரியிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
1993ம் ஆண்டு பொது ஆவண காப்பக சட்டத்தின் படி தேசிய ஆவண காப்பகம் (என்.ஏ.ஐ.,) நடப்பில் உள்ள  முக்கிய பிரமுகர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய பொருள்களை பத்திரப்படுத்தவும் பாதுகாவலராகவும் உள்ளது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சொற்பொழிவு பதிவுகள், பல விழாவில் பங்கேற்ற அசல் புகைப்படங்கள், அசல் கடிதங்கள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான்கார்டு, பல்கலையில் பெற்ற டாக்டர் பட்டங்கள் ஆகியவற்றை தேசிய ஆவண காப்பகத்தில் வைத்திட அதிகாரிகள், அப்துல் கலாம் உறவினர்களிடம் வலியுறுத்தினர்.
அதன்படி நேற்று டில்லி சென்ற அப்துல் கலாம் உறவினர்கள் நசீமா மரைக்காயர், ஜெயினுலாபுதீன், பேரன்கள் ேஷக் சலீம், சேக் தாவூத் தேசிய ஆவண காப்பக இயக்குனர் ஜெனரல் ஸ்ரீஅருண் சிங்காலிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஷேக்சலீம் கூறியதாவது: அப்துல் கலாமின் வரலாற்று சாதனைகள் அடங்கிய அசல் புகைப்படங்கள், பட்டங்கள், கடிதங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை இளம் தலைமுறையினர் பார்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று (ஏப்.,28) தேசிய ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

