பா.ம.க., பாலுவுக்கு பாதுகாப்பு தேவையா? ஐகோர்ட் அறிக்கை கேட்பு
பா.ம.க., பாலுவுக்கு பாதுகாப்பு தேவையா? ஐகோர்ட் அறிக்கை கேட்பு
ADDED : அக் 31, 2025 02:10 AM
சென்னை:  வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், பா.ம.க., வழக்கறிஞர் பாலுவுக்கு பாதுகாப்பு தேவையா, இல்லையா என்பது குறித்து, காவல் துறை ஆராய்ந்து தெரிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நுழைவு வாயில் வெளியே, கடந்த 7ம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை, வி.சி., கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தாக்கினர்.
இவ்விவகாரத்தில், தமிழக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார் கவுன்சில் இணை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு கடிதம் எழுதினார். அதையடுத்து, பாலுவுக்கு கடலுாரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.பாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. புகார் மனு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தற்போது வரை, மனுதாரருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால், பாதுகாப்பு தேவையில்லை,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு பாதுகாப்பு தேவையா, இல்லையா என்பதை, காவல்துறை பாதுகாப்பு குழு ஆராய்ந்து தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

