வருவாய் துறையினரின் பிரச்னையை தீர்க்க முதல்வருக்கு நேரமில்லையா? * உதயகுமார் கேள்வி
வருவாய் துறையினரின் பிரச்னையை தீர்க்க முதல்வருக்கு நேரமில்லையா? * உதயகுமார் கேள்வி
ADDED : நவ 27, 2024 08:34 PM
மதுரை:''பணியிடங்களை பாதுகாக்க போராடி வரும் வருவாய் துறையினரின் பிரச்னையை தீர்க்க, முதல்வர் ஸ்டாலினுக்கு நேரமில்லையா. அரசு ஊழியர்கள், மக்கள் போராடி வருவதால் தமிழகமே இன்றைக்கு போராட்ட களமாக மாறிவிட்டது,'' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திரும்பிய திசை எங்கும் தி.மு.க., அரசின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். மக்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மக்கள் நல்வாழ்வு பணியாளர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். இதனால், தமிழகமே போராட்ட களமாக உள்ளது.
வடகிழக்கு பருவ மழையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்திருக்கிறதா? வருவாய்த் துறை அமைச்சர் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில், 'பயிர்கள் சேதம் அடையவில்லை. இதுவரை அதுகுறித்த விபரங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை' என்று உண்மைக்கு மாறாக கூறுகிறார். அதே நேரத்தில் நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் பயிர் சேதம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வருவாய்த் துறையில் தொடர்ந்து பணியிடங்கள் பறிபோகும் அவலம் உள்ளது. இதை சுட்டிக்காட்டி வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இதற்கு தீர்வு காண முதல்வருக்கு நேரமில்லை; அக்கறை இல்லை.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.