அரசு சான்றிதழுக்கு ஒவ்வொரு முறையும் ஆவணம் வேண்டாம்: புதிய வசதி ஏற்பாடு
அரசு சான்றிதழுக்கு ஒவ்வொரு முறையும் ஆவணம் வேண்டாம்: புதிய வசதி ஏற்பாடு
UPDATED : நவ 21, 2026 05:34 PM
ADDED : நவ 21, 2026 05:34 PM
சென்னை: வருமானம், ஜாதி சான்று உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை, மக்கள் எளிதாக பெறும் வசதியை, தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது.
அரசு – மக்கள் இடையே, சேவைகள் வழங்குவதற்கான முதன்மை தளமாக, ‘இ – சேவை’ எனப்படும், மின்னணு சேவை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகம் முழுதும், 25,277 ‘இ – சேவை’ மையங்கள் உள்ளன.
இவற்றின் வாயிலாக, வருவாய் துறை, மின்சாரம் உட்பட பல்வேறு துறைகளின், 275 சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், வருமானம், ஜாதி, வாரிசு சான்று போன்ற சான்றிதழ்களை பெற, விண்ணப்பம் செய்வோர், ‘ஆதார்’ எண், ரேஷன் கார்டு, கல்வி சான்று உள்ளிட்ட ஆவணங்களை, பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறையும் சான்று பெற, தனித்தனியே ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, புதிய தொழில்நுட்ப வசதியை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை உருவாக்க உள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இ – சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் சேவைகள், மேம்படுத்தப்பட உள்ளன. ‘டிஜி லாக்கர்’ என்பது, மத்திய அரசால் தொடங்கப்பட்ட, பாதுகாப்பான, ‘ஆன்லைன்’ ஆவணப் பெட்டகம். அதில், அரசு சான்றிதழ்களை ‘டிஜிட்டல்’ வடிவில் சேமிக்கலாம். அரசு சார்பில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் எண், ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி, ஜாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விரும்புவோர், ஒரு முறை சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ‘டிஜி லாக்கரில்’ சேமிக்கப்படும்.
அதே நபர், எந்த சான்றிதழ் பெற இணையதளத்தில் விண்ணப்பித்தாலும், அதற்கு உரிய ஆவணங்களை, டிஜி லாக்கரில் இருந்து, ‘ஆதார்’ சரிபார்ப்புடன் எடுத்துக் கொள்ள முடியும். அசல் ஆவணங்களை, கையில் எடுத்து செல்ல வேண்டியதில்லை. நேரமும் குறைகிறது. இந்த தொழில்நுட்பம் விரைவாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
