அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு குவிந்த ரூ.500 கோடி நன்கொடை
அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு குவிந்த ரூ.500 கோடி நன்கொடை
ADDED : பிப் 05, 2025 10:06 PM
சென்னை:அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில், முன்னாள் மாணவர்கள், சிறு, குறு, பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில், கடந்த 2022, டிச.,ல், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' எனும் அமைப்பை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அப்போது அவர், தன் சொந்த நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, https://nammaschool.tnschools.gov.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, தனி வங்கிக் கணக்கு வாயிலாக, நன்கொடையாளர்கள் இணைக்கப்பட்டனர்.
அவர்கள் வழங்கிய நிதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்த விபரங்கள், புகைப்பட சான்றுகளாக அனுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கையும், நன்கொடையும் அதிகரித்தன. கடந்த டிச., வரை, 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எழுதுபொருட்கள், புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் என, பயன்படும் பொருட்களாகவும் நன்கொடை வழங்குகின்றனர். சிலர், மாணவர்களுக்கு கல்வியாகவும் வழங்குகின்றனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு, நம்பிக்கையுடன் நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நம் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, 'ரோபோட்டிக்ஸ்' வரை புதிய தொழில்நுட்பங்களை கற்பிக்க, முதல்வரும், நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.
அதை பயன்படுத்தி, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும். அதுதான் நன்கொடையாளர்களுக்கு செய்யும் கைமாறு.
இவ்வாறு அவர் கூறினார்.