ADDED : மார் 06, 2024 11:19 PM

பந்தலுார்:நீலகிரி லோக்சபா தொகுதியில், பந்தலுார் அருகே மாநில எல்லையில் உள்ளது கிளன்ராக் வனப்பகுதி.
இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் இருந்து 10 கி.மீ., துாரம், வனப்பகுதி வழியாக தாழ்வாக செல்லும், மண் சாலை மற்றும் ஒற்றையடி நடைபாதை வழியாகத்தான் கிராமத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.
வனவிலங்குகள் அதிகம் நிறைந்துள்ள இந்தப் பகுதிக்கு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலையில், இந்த கிராமத்தில் உள்ள வாக்காளர்களை, தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் ஓட்டு போட கேட்டு சந்திப்பது வழக்கம்.
தேர்தல் முடிந்ததும் இவர்களை, யாரும் கண்டு கொள்வதில்லை. 'சாலை, குடிநீர், குடியிருப்பு, கழிப்பறை' என, எந்த வசதிகளும் இல்லாமல், வனத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கல்யாணி கூறுகையில், ''அரசியல்வாதிகள் பதவிக்கு வந்து சம்பாதிப்பதற்காக நாங்கள் ஏன் நடந்து சென்று அவர்களுக்கு ஓட்டு போட வேண்டும்? பல தேர்தலிலும் ஓட்டுப்போட, வாகனத்தில் அழைத்துச் செல்லும் நபர்கள் ஓட்டு பதிவு முடிந்ததும், எங்களை அனாதையாக வழியில் இறக்கி விட்டு செல்கின்றனர்.
''எனவே, வரும் தேர்தலில் ஓட்டு கேட்டு யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது. வந்தாலும் யாரையும் பிரசாரத்துக்கு விட மாட்டோம்,'' என்றார்.

