மாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக பொங்கல் கொடுக்கக் கூடாது! விவசாயிகளுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
மாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக பொங்கல் கொடுக்கக் கூடாது! விவசாயிகளுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
ADDED : ஜன 16, 2026 08:24 AM

கோவை: கால்நடைகளுக்கு அளவுக்கு அதிகமாக பொங்கல் உணவளித்தால் உயிரிழப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் உஷார்படுத்துகின்றனர்.
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒரு நாள் கவனிப்பு என்ற பெயரில் பொங்கல், அரிசி, கரும்பு, பழ வகைகளை இஷ்டத்துக்கு கால்நடைகளுக்கு உணவாக தரப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக பொங்கல் கொடுத்தால், எதிர்ப்பு சக்தி குறைவான கால்நடைகளுக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்துள்ளது.
தவிர்க்க வேண்டும்!
கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:
மாட்டு பொங்கல் அன்று வழக்கமாக கரும்பு, பொங்கல், அரிசி மற்றும் வடை போன்ற எண்ணெய் பலகாரங்களை ஆடு, மாடுகளுக்கு விவசாயிகள் வழங்குகின்றனர்.
கரும்பில் சர்க்கரை அதிகம் உள்ளது. அதை சாப்பிடும் கால்நடைகள் இரு நாட்கள் மந்தமாகவே இருக்கும். எனவே, முழு கரும்பாக தராமல் சக்கையாக சாப்பிடுவதற்கு வழங்கலாம்.
பொங்கல், அரிசி உள்ளிட்டவற்றை ஒரு கையளவு உருண்டை தரலாம். அதிகமாக சாப்பிட்டால் கால்நடைகளின் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து நரம்பு மண்டலத்தை பாதிக்கும். வயிறு உப்புசம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.
மீதமிருக்கும் பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களை மறுநாளும் வழங்குகின்றனர். கிலோ கணக்கில் சாப்பிடுவதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் அதை தவிர்க்க வேண்டும். பழ வகைகளால் எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
காத்திருக்க கூடாது!
வயிறு உப்புசம், மந்தமாக இருக்கும் கால்நடைகளுக்கு, 15 கிராம் பெருங்காயத்தை அரை லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து தரலாம். அல்லது 100-150 கிராம் சமையல் சோடாவில் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஊட்ட வேண்டும்.
கால்நடைகளின் நிலைமை மோசமாகும் வரை காத்திருக்காது உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

