தேவையின்றி வெளியே வராதீங்க: பொது மக்களுக்கு அறிவுரை
தேவையின்றி வெளியே வராதீங்க: பொது மக்களுக்கு அறிவுரை
UPDATED : நவ 29, 2024 10:35 PM
ADDED : நவ 29, 2024 08:26 PM

சென்னை: நாளை (நவ.,30) பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரியில் கரையை கடக்கக்கூடும். இதனால், அதி கனமழை பெய்யும், சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நாளை புயல் கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளிக்காற்று வீசும் என்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஐ.டி., நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் என நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்போது, கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நாளை வழக்கம் போல் மாநகர போக்குவரத்து சேவை இயங்கும் எனவும், மழையை பொறுத்து மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மீட்பு படை
அரக்கோணத்தில் இருந்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 90 பேர் கொண்ட குழுவினர் விரைந்துள்ளனர்.
பூங்கா மூடல்
90 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவும் நாளை மூடப்படுகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை 15
மண்டலங்களில் 262 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஹைட்ராலிக்
ஏணி, ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்களும், புயல் பாதிப்பை சரி செய்ய
டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்களும் தயாராக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்ட மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அம்மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
தயார்
கடலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில், மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. 28 புயல் மற்றும் 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 22 இடங்கள் ஆபத்தான பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ளது. 2,263 மின்கள பணியாளர்கள் மற்றும் 274 தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கடலூரில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம்நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.
செங்கல்பட்டில் கூட்டுறவுத்துறை விற்பனையாளர் பணியிடத்திற்கான நாளை நடைபெற இருந்த நேர்முகத்தேர்வு 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.