நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டாம்! பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டாம்! பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
ADDED : ஏப் 10, 2025 04:58 AM
பெங்களூரு: சட்டசபையில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றும், சபாநாயகரிடமே கோரிக்கை விடுப்பது என்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை 'ஹனிடிராப்' செய்ய முயற்சி நடந்ததாக குற்றஞ்சாட்டினார். இது பெரும் சூறாவளியை கிளப்பியது.
இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி, சட்டசபையில் எதிர்க்கட்சியான பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினார்.
அப்போது சபாநாயகரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக, அக்கட்சியின் 18 எம்.எல்.ஏ.,க்களை 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து, பெங்களூரின் தனியார் ஹோட்டலில், அஸ்வத் நாராயணா தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சபாநாயகரின் முடிவு குறித்து, கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அவரது முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் அஸ்வத் நாராயணா அளித்த பேட்டி:
சட்டசபையில் எங்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏ.,க்களை விதிமுறை 348ன் கீழ் சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த விதியின்படி ஒரு நாளோ அல்லது அதிகபட்சம் சபை நேரம் முடியும் வரை மட்டுமே, சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் இதை மீறி, ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்திருப்பது சட்டவிரோதம்.
மஹாராஷ்டிராவில் விதிமுறை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடினர். விசாரணை நடத்திய நீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவு விதிமீறலானது என, தீர்ப்பளித்தது.
அதேபோன்று கர்நாடகாவிலும் சபாநாயகர் விதியை மீறி நடந்து கொண்டார். நாங்கள் சபாநாயகர் பீடத்தை அவமதிக்கவில்லை.
அப்படி இருந்தும் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்திருப்பது சரியல்ல. அரசின் நெருக்கடிக்கு பணிந்து, இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அவர் மறுபரிசீலனை செய்து, அதை வாபஸ் பெற வேண்டும்.
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, நாங்களும் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றம் சென்றால் சபாநாயகரின் உத்தரவு ரத்தாகும். ஆனால் நாங்கள் நீதிமன்றம் செல்லமாட்டோம். இதை உணர்ந்து அவராகவே, உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என, அவரை சந்தித்து வேண்டுகோள் விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.