தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'அரசியலாக்க வேண்டாம்!'

 'அரசியலாக்க வேண்டாம்!'

 'அரசியலாக்க வேண்டாம்!'


ADDED : செப் 26, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'ஜெம் வீரமணி வழக்கு தீவிரமானது என்பதால், அரசியல் ரீதியாக, அமைச்சர்கள், தி.மு.க.,வினர் கருத்து தெரிவிக்க வேண்டாம்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரை முருகன் தாக்கல் செய்த மனு:

இந்த வழக்கில், முந்தைய தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளை தப்பிக்க விட்டு விட்டதாக, அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

த.வெ.க., கட்சியின் ஐ.டி., பிரிவும், தி.மு.க.,வுக்கு எதிராக குற்றம் சாட்டி, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறது.

இவை, தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. 'ஜெம்' வீரமணிக்கு எதிராக, 2025 அக்., 6ம் தேதி புகார் வந்த மறுநாளே, வழக்குப் பதிவு செய்து, தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், உண்மைக்கு மாறாக, ஆளுங்கட்சியினர் அவதுாறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

எனவே, 'ஜெம்' வீரமணிக்கு எதிரான வழக்கில், தி.மு.க., அரசு மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவிக்க, அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க.,வின் ஐ.டி., பிரிவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், 1.01 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்குவதுடன், ஏற்கனவே பதிவிட்டதை நீக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், 'சென்னை உயர்நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட, 'மெட்டா, யூ டியூப், எக்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்' என்று, தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், 'அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனில், முன்கூட்டியே, 'நோட்டீஸ்' வழங்க வேண்டும். அவ்வாறு 'நோட்டீஸ்' வழங்காமல், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என, வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரைமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு, அமைச்சர்கள், த.வெ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் பதிலளிக்க அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை, வரும், 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்பின், 'வீரமணி தொடர்பான வழக்கை படிக்கும் போது மனம் பதறுகிறது. வழக்கு தீவிரமானது என்பதால், அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என, அமைச்சர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும், இரு தரப்பு வழக்கறிஞர்களும் அறிவுறுத்துங்கள்.

'இதில், இருதரப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பதால், வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும்' என, நீதிபதி கருத்து தெரிவித்தார்.

'வீடியோ' வெளியிட உயர்நீதிமன்றம் தடை 'ஜெம்' வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியரின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னையை சேர்ந்த, துளிர் அறக்கட்டளை தரப்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ''இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்படுவதால், பாதிக்கப்பட்ட சிறுமியர் புகாரளிக்க முன் வர மாட்டார்கள். பத்திரிகை சுதந்திரம் என்பது, ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல,'' என்று தெரிவித்தார். அதன்பின், அவர் பிறப்பித்த உத்தரவில், ''இந்த வழக்கு தொடர்பான வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்கள் விவாதங்கள் நடத்தக்கூடாது. வழக்கின் முன்னேற்றம் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ள, வாரம் ஒரு முறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும். இந்த மனு மீது, மத்திய, மாநில அரசுகள், காவல்துறை மற்றும் வீடியோ வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை, வரும், 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us