ADDED : நவ 25, 2024 01:21 AM

சென்னை: 'இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதுாறு பரப்பாதீர்' என, அவரது மனைவி சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான, 29 ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக, அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்த நிலையில், நேற்று அவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
நான் தற்போது மும்பையில் உள்ளேன். எனக்கு இரு மாதங்களாக உடல் நிலை சரியில்லை. இதன் காரணமாகவே ரஹ்மானிடம் இருந்து, 'பிரேக்' எடுக்க விரும்பினேன். தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.
ஒட்டு மொத்த தமிழ் மீடியா மற்றும் யூ டியூபர்களுக்கு வேண்டுகோள். தயவு செய்து அவரை தவறாக சொல்லாதீர்; அவர் அற்புதமானவர். இவ்வுலகில் சிறந்த மனிதர்.
அவர் மீது நான் வைத்த நம்பிக்கை, என் வாழ்வை விட பெரியது. அந்த அளவுக்கு அவரை நேசிக்கிறேன். என் உடல் நிலை காரணமாக, சென்னையில் இருந்து மும்பை வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னையில் இருக்கும் ரஹ்மானின் பிசியான வேலைக்கு நடுவே, என்னுடன் இருந்து கவனிக்க அவரால் முடியாது.
அவருக்கும், குழந்தைகளுக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காகவே, இந்த முடிவை எடுத்தேன். இன்னும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சிகிச்சை முடிந்ததும் சென்னை திரும்புவேன். ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி தொந்தரவு செய்யாதீர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.