ADDED : ஏப் 17, 2025 09:55 PM
சென்னை:'அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைகளை, அறிவாலயமாக மாற்றி விடாதீர்கள்' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
துணைவேந்தர்களை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லி இருக்கிறாரோ, அதுதான் புதிய கல்வி கொள்கை. முதல்வர் ஸ்டாலின் பேசுவதற்காக மட்டும் எழுதிக் கொடுத்து, அதை அப்படியே படிக்கும் கருத்துக்கள் அல்ல புதிய கல்விக் கொள்கை. கஸ்துாரிரங்கன் தலைமையில், பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின் தயாரிக்கப்பட்டது தான் அது. அதை அறிமுகப்படுத்தும்போது, 'நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து, உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி' என்று, பிரதமர் மோடி கூறினார்.
புதிய கல்வி கொள்கையை முற்றிலுமாக படிக்காமல், மற்ற மாநிலங்கள் எல்லாம் அதை பின்பற்றி, மாணவர்களை உலக அரங்கிற்கு உயர்த்தி கொண்டிருக்கும்போது, முதல்வர் ஸ்டாலின் கறுப்பு கண்ணாடியை போட்டு கொண்டு தன் விருப்பு, வெறுப்பிற்கு ஏற்ப, மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறார்.
உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைகள் திகழ வேண்டும் என்று கூறிவிட்டு, அவற்றை தங்கள் தலைமை கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைகளை, அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள். இனியாவது, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து, ஆக்கப்பூர்வமாக முதல்வர் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.