'மைக்' வேண்டாம் பாய்மர படகு கொடுங்க..: சீமான் தரப்பு மீண்டும் கோரிக்கை
'மைக்' வேண்டாம் பாய்மர படகு கொடுங்க..: சீமான் தரப்பு மீண்டும் கோரிக்கை
ADDED : மார் 25, 2024 05:17 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனில் சீமான் முறையிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அவரது கட்சி முன்பு போட்டியிட்ட 'கரும்பு விவசாயி' சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், 'மைக்' சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக விழாவில், சின்னத்தை குறிப்பிடாமல் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். இதனால் 'மைக்' சின்னத்தை சீமான் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மைக் சின்னத்திற்கு மாற்றாக படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனில் சீமான் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று மாலை அல்லது நாளை முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சின்னம் முடிவான பின்னரே பிரசாரத்தை துவங்க சீமான் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

