அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வீடு வீடாக... அழைப்பு!
அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வீடு வீடாக... அழைப்பு!
UPDATED : மே 01, 2024 11:46 PM
ADDED : மே 01, 2024 11:44 PM

சென்னை: அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வருமாறு, வீடு வீடாகச் சென்று நகை கடைகள் அழைப்பு கொடுக்க துவங்கியுள்ளன. தங்கம் விற்பனையை மூன்று நாள் கொண்டாட்டமாக விரிவுபடுத்தியுள்ள நகை கடைகள் விழாககோலம் பூண்டதுடன், சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
வரும் 10ம் தேதி வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருகிறது. சனி, ஞாயிறு சேர்த்து மூன்று நாட்கள் அட்சய திருதியை கொண்டாட நகை வியாபாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தாம்பூல பை
இதுவரை கண்டிராத புதுமையாக, தங்கம் வாங்க வருமாறு வீடு வீடாகச் சென்று தாம்பூல பை கொடுத்து, வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு, 20,000 கிலோ தங்கம் விற்பனையான நிலையில், இந்தாண்டு அதை விட கணிசமாக அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். வேகமாக அதிகரித்த தங்கம் விலை சரிய துவங்கி இருப்பது, அதிகமானவர்களை நகை கடைக்கு வரவழைக்கும் என நம்புகின்றனர்.
தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. விலை அதிகரித்தாலும், நகை கடைகளில் கூட்டம் குறைவதில்லை. ஏனெனில், மோகம் குறையாத ஆபரணமாக தங்கம் இருப்பதுடன், அவசர தேவைக்கு உடனடியாக பணமாக மாற்ற முடிகிறது; நல்ல முதலீடாகவும் மதிக்கப்படுகிறது.
செல்வம் பெருகும்
தீபாவளி, அட்சய திருதியை ஆகியவை தங்கம் வாங்க உகந்த நாளாக பலரும் கருதுகின்றனர். அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அதை சாதகமாக்கி, 'நகை வாங்கினால் தங்க நாணயம் இலவசம்' என்றும், கிராமுக்கு 500 ரூபாய் குறைப்பு; சவரனுக்கு சில ஆயிரங்கள் தள்ளுபடி' என நகை கடைகளும், பெரிய பிராண்டுகளும் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
பிரபல 'தனிஷ்க்' நிறுவனம், வீடு வீடாகச் சென்று தாம்பூலம் மற்றும் அழைப்பிதழ் கொடுத்து, நகை வாங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதே உத்தியை பின்பற்றி, வேறு பல நிறுவனங்களும் அழைப்பு வினியோகித்து வருகின்றன.
கடந்த மாதம், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,000 ரூபாயை தாண்டியது. நேற்று, 53,080 ரூபாய்க்கு விற்றது. கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு ஒரு சவரன், 44,840 ரூபாய்க்கு விற்றது. ஓராண்டில் சவரனுக்கு, 8,240 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை மாற்றத்தை பொருட்படுத்தாமல், ஏராளமான வாடிக்கையாளர்கள் அட்சய திருதியைக்கு நகை வாங்க பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருவதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
இந்தாண்டு அட்சய திருதியை, திதியின் நேரத்திற்கு ஏற்ப மூன்று நாட்கள் வருகிறது. ஒரு மாதமாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டிய தங்கம் விலை இரு தினங்களாக குறைந்துள்ளது.
ஆன்லைனிலும் கடைகளுக்கு நேரில் வந்தும் பணம் செலுத்தி நிறைய பேர் முன்பதிவு செய்கின்றனர். வரும் நாட்களில் தங்கம் விலை உயரக்கூடும். இந்த அட்சய திருதியைக்கு கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ககிறோம்.
இவ்வாறு சலானி கூறினார்.
***

