ADDED : மார் 10, 2024 11:41 PM

மூணாறு : கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே காஞ்சியாறு கக்காட்டுகடையை சேர்ந்தவர் விஷ்ணு, 27, நிதிஷ், 31, மார்ச் 3ல் அப்பகுதி வேலாயுதன் என்பவர் ஒர்க் ஷாப்பில் திருடிய போது சிக்கினர்.
விசாரணையில், விஷ்ணுவின் தந்தை விஜயன், 57, சகோதரியின் குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிந்தது. கக்காட்டுகடை பகுதியில் விஷ்ணு, நிதிஷ் ஆகியோர் வசித்த வாடகை வீட்டை போலீசார் சோதனையிட்டதில், மாந்திரீக பூஜை நடந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. நரபலி நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
நிதிஷை போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பூஜை, மாந்திரீகம் செய்த நிதிஷூக்கு, விஷ்ணுவின் நட்பு ஏற்பட்டது. விஷ்ணுவின் சகோதரிக்கு கையில் ஏற்பட்ட பிரச்னையை பூஜையில் சரி செய்வதாக கூறி, அவரது குடும்பத்தில் நிதிஷ் பழகினார். நாளடைவில் விஷ்ணு குடும்பத்தினர் நிதிஷ் கட்டுப்பாட்டில் வந்தனர்.
விஷ்ணு சகோதரியுடன் நிதிஷூக்கு ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தில், 2016ல் ஆண் குழந்தை பிறந்தது. வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதிய நிதிஷ், விஷ்ணு, அவரது தந்தை விஜயன் சேர்ந்து பிஞ்சு குழந்தையை மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர்.
உடலை வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் குழி தோண்டி புதைத்தனர். பின், வெவ்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்தனர்.
இந்நிலையில், விஷ்ணுவின் தந்தை விஜயனுடன் ஏற்பட்ட தகராறில், நிதிஷ் சுத்தியலால் அவரை அடித்து கொலை செய்துள்ளார். அவரது உடலை விஷ்ணு, அவரது தாய் சுமா உதவியுடன் கக்காட்டுகடை வாடகை வீட்டில் நிதிஷ் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கக்காட்டுகடை வீட்டை போலீசார் நேற்று தோண்டிய போது, விஜயனின் உடல் மூன்றாக மடித்து அட்டை பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டிருந்தது.
மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளை சேகரித்து கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் மோப்ப நாய் வாயிலாக ஆய்வு நடந்தது. நிதிஷ், விஷ்ணு, அவரது தாய் சுமா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

