டவுட் தனபாலு: நிதிஷ் குமார் வெளியேறியதால் இண்டியா கூட்டணிக்கு பாதிப்பு இல்லை
டவுட் தனபாலு: நிதிஷ் குமார் வெளியேறியதால் இண்டியா கூட்டணிக்கு பாதிப்பு இல்லை
ADDED : ஜன 30, 2024 01:47 AM

ராஜ்யசபா எம்.பி.,யும், காங்., மூத்த தலைவருமான முகுல் வாஸ்னிக்: பிரிவினைவாத சக்திகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாத பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரை போன்றவர்கள், 'இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேற தான் செய்வர்; இதனால் பாதிப்பில்லை. இண்டியா கூட்டணி ஒவ்வொரு நாளும் வலுவானதாக மாறும்.
டவுட் தனபாலு: அது சரி... துவக்கத்தில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மாதிரி இருந்த, 'இண்டியா' கூட்டணி, இப்ப பாசஞ்சர் ரயில் மாதிரி அங்கங்க பிரேக் போடுது... இன்னும் போகப்போக இந்த ரயில் தொடர்ந்து ஓடுமா, இல்ல தடம் புரண்டு கவிழ்ந்திடுமான்னு எக்கச்சக்க, 'டவுட்' வருதே!
தமிழக காங்., தலைவர் அழகிரி: தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு திருப்திகரமாக இருந்தது. தமிழகம், புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெறுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து பேசினோம். தி.மு.க.,விடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை.
டவுட் தனபாலு: மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் ஒரு பக்கம், 'இண்டியா' கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்க, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ஒரே அடியா கூட்டணிக்கு முழுக்கு போட்டுட்டு பா.ஜ., பக்கம் தாவிட்டார்... இந்த நேரத்துல தி.மு.க.,விடம் தொகுதி பட்டியல் கொடுத்தா சீட் எண்ணிக்கையை ரொம்ப குறைச்சிடுவாங்கன்னு நினைச் சிட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், மத்திய அமைச்சர் அமித் ஷா, என்னையும், பழனிசாமியையும் அழைத்து பேசினார். அப்போது, 'தினகரன் கட்சிக்கு, 10 முதல், 20 சீட் தர வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும்' என, தெரிவித்தார். அதை பழனிசாமி ஏற்கவில்லை. பழனிசாமி எடுத்த முடிவால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோற்றது.
டவுட் தனபாலு: அப்படி சொல்லுங்க... 'அப்பவே பழனிசாமி சுயமா தான் முடிவெடுத்தார்... பா.ஜ., வாசித்த மகுடிக்கு அவர் ஆடலை'ன்னு தெளிவா வாக்குமூலம் கொடுத்துட்டீங்க... இதுனால பா.ஜ.,வை பழனிசாமி எதிர்ப்பது நாடக மல்ல; உண்மை தான்னு, 'டவுட்'டே இல்லாமல் நம்பலாமோ!