டவுட் தனபாலு: கூட்டணி குறித்து பேசி வருகிறோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
டவுட் தனபாலு: கூட்டணி குறித்து பேசி வருகிறோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ADDED : ஜன 27, 2024 01:17 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கூட்டணி குறித்து சிலரிடம் பேசி வருகிறோம். முழுமை அடைந்ததும் தகவல் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
டவுட் தனபாலு: தங்களை கூட்டணியில சேர்த்துக்க மாட்டாங்களா என அ.தி.மு.க., ஆபீஸ் வாசல்ல பல கட்சிகள் தவமாய் தவமிருந்த காலங்கள் எல்லாம், ஜெ.,யுடன் முடிவுக்கு வந்து விட்டது... இப்ப, யாராவது நம்மை தேடி வருவாங்களா என வழி மேல் விழி வைத்து நீங்க காத்திருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தானுக்கு அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் ஆறாவது மாநிலம் கர்நாடகா. இதனால், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக் கூட, அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: டாக்டர் அடிக்கடி, தமிழக அரசுக்கு எதிரா கண்டன அறிக்கைகளை வெளியிடுறாரே... லோக்சபா தேர்தல்ல, இவரது கட்சியை கூட்டணியில சேர்ப்பது குறித்து, பரிசீலிக்கக் கூட ஆளுங்கட்சி முன்வராம போயிடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்: பிரதமரை முன்னிலைப்படுத்துவது தேர்தல் அறிக்கை அல்ல. மாநிலத்தின் நலனை மையப்படுத்தி, அதை நிறைவேற்ற முயற்சி எடுப்போம் என்பதுதான் தேர்தல் அறிக்கை. மாநிலங்களின் நலன்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்.
டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலை பொறுத்த வரைக்கும், யார் பிரதமராக வரவேண்டும் என மக்களிடம் விளக்கி தானே ஓட்டு சேகரிக்க முடியும்... மோடியையும் ஏத்துக்க முடியாம, அவருக்கு மாற்றா ஒருத்தரையும் சுட்டிக்காட்ட முடியாத இக்கட்டான சூழல்ல நீங்க இருப்பதால், இப்படி பூசி மெழுகுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

