கத்திக்குத்தால் பாதித்த டாக்டர் பாலாஜி 'டிஸ்சார்ஜ்'
கத்திக்குத்தால் பாதித்த டாக்டர் பாலாஜி 'டிஸ்சார்ஜ்'
ADDED : நவ 20, 2024 12:27 AM
சென்னை:கத்திக் குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜி, சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில், தலைமை டாக்டராக பாலாஜி பணியாற்றி வருகிறார். அவரிடம் பெருங்களத்துாரை சேர்ந்த பிரேமா சிகிச்சை பெற்றார்.
அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; சிகிச்சையின் போது தரக்குறைவாக நடத்தினார் என்று கூறி, அவரது மகன் விக்னேஷ், கடந்த 13ம் தேதி மருத்துவமனையில் பணியில் இருந்த, டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றார்.
அவரை போலீசார் கைது செய்தனர். பலத்த காயமடைந்த டாக்டர், அதே மருத்துவமனையில், தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி கூறுகையில், ''டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். ஆறு வாரம் விடுப்பு கேட்டுள்ளார். அதன்பின், மீண்டும் பணிக்கு திரும்புவார்,'' என்றார்.

