நாட்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் மறைவு
நாட்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் மறைவு
ADDED : ஜன 27, 2025 01:26 AM

சென்னை: நாட்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் செரியன், 82, நேற்று முன்தினம் காலமானார்.
இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான கே.எம்.செரியன், கேரளாவை சேர்ந்தவர். சென்னை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகு, விஜயா மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் உள்ளிட்டவற்றில் பணியாற்றினார். பின், 'பிரான்டியர் லைப்லைன்' மருத்துவமனை, டாக்டர் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் ஆகியவற்றை நிறுவினார்.
கடந்த 1975ல், நாட்டில் முதன் முதலாக, 'மகா தமனி பைபாஸ்' அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதித்தார். இறந்தவரிடம் இருந்து தானமாக இதயத்தை பெற்று, வேறொருவருக்கு பொருத்தியும் சாதித்தார்.
இவர், குழந்தைகளுக்கான இதய மாற்று அறுவை சிகிச்சைகளிலும், இந்திய டாக்டர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். உலகின் பல்வேறு மருத்துவமனைகளில், மிக முக்கிய பிரமுகர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதித்தவர்.
நேற்றுமுன்தினம், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை திடீரென மயங்கி விழுந்தார். அருகிலிருந்தோர் அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி, இரவு 11:55 மணிக்கு, அவர் இறந்து விட்டதாக, அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்தார்.
மறைந்த செரியன், நாட்டின் உயரிய விருதான, பத்மஸ்ரீ, ஹார்வர்டு மருத்துவ பல்கலை உள்ளிட்டவற்றின் விருதுகளை பெற்றவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

