வாக்களிக்க முடியாதவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி துணை நிற்கும்: கனிமொழி
வாக்களிக்க முடியாதவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி துணை நிற்கும்: கனிமொழி
ADDED : அக் 04, 2024 07:58 PM

துாத்துக்குடி:தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், துாத்துக்குடி சிலுவைப்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 3.70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகளை கனிமொழி எம்.பி.,திறந்து வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
புலம் பெயர்ந்த மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமின் பெயர் இருக்கக்கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம்கள் என பெயரை மாற்றியவர் முதல்வர் ஸ்டாலின். முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய ஆட்சியாக தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே, புலம் பெயர்ந்த மக்களுக்கு உறுதுணையாக தி.மு.க., ஆட்சி செயல்படும்.
முகாம்களில் வாழக்கூடிய மக்களுக்கு, இருக்கக்கூடிய 'மெண்டல் ஹெல்த்' பிரச்னைகளை உணர்ந்து கொண்டு ஒரு பாலிசி திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர். இந்த மண்ணில், புலம் பெயர்ந்த மக்களும், எல்லோரையும் போல வாழ உரிமை பெற்றவர்கள் என்ற மனநிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்குக்கான ஆட்சியாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதையும் தாண்டி, வாக்களிக்க முடியாதவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி துணை நிற்கும் என்று நிலைநாட்டி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.