ஆட்சிக்கு வந்ததும் கொள்கைகளை மறக்கும் திராவிட கட்சிகள்: கிருஷ்ணசாமி
ஆட்சிக்கு வந்ததும் கொள்கைகளை மறக்கும் திராவிட கட்சிகள்: கிருஷ்ணசாமி
ADDED : ஆக 18, 2025 04:00 AM

திருச்சி: நெல்லையில் இளைஞர் கவின், ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக, தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதில் திருப்தி இல்லை. வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். பிற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
ஆட்சி, அதிகாரம் தங்களுக்கு துணை நிற்கும் என்ற எண்ணத்தில், துணிச்சலாக ஆணவக் கொலைகளில் ஈடுபடுகின்றனர்.
ஆணவப் படுகொலையை தடுக்க, தமிழகத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஆணவக் கொலை வழக்குகளில், நீதிமன்றங்கள் விரைந்து தண்டனை அளிக்க வேண்டும்.
கடந்த 2011 - 16 ஆட்சிக் காலத்தில், 100க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகளை தடுக்கத் தவறியதால், தற்போது அவை தொடர்கதையாகி விட்டன.
அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுமே ஆட்சிக்கு வரும் போது, தாங்கள் பிரசாரம் செய்த கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று, அவற்றை மறந்து விடுகின்றன. ஆட்சி, அதிகாரத்துக்கு எதிரான எங்கள் பிரசாரத்துக்கும், தேர்தல் கூட்டணிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.