கட்டடங்களுக்கு கூட்டுமதிப்பு நிர்ணயிப்பதில் இழுபறி: பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பலர் தவிப்பு
கட்டடங்களுக்கு கூட்டுமதிப்பு நிர்ணயிப்பதில் இழுபறி: பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பலர் தவிப்பு
ADDED : அக் 27, 2024 11:39 PM

சென்னை: புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, கூட்டு மதிப்பு நிர்ணயிப்பதற்கான கோப்புகளை, பதிவுத்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நிலங்களுக்கு சர்வே எண் வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயித்துள்ளது. திருத்தப்பட்ட இந்த வழிகாட்டி மதிப்புகள், பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாற்றப்பட்டது
சார் - பதிவாளர் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில், சொத்து மதிப்புகள் இதற்கு உட்பட்டு இருப்பது அவசியம். இந்நிலையில், அடுக்குமாடி கட்டுமான திட்டங்களில், வீடு விற்பனைக்கான நடைமுறை, டிசம்பர், 1 முதல் மாற்றப்பட்டது.
நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., மதிப்புக்கு ஒரு பத்திரம், கட்டுமான ஒப்பந்தத்துக்கு ஒரு பத்திரம் என, தனித்தனியாக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
நிலம், கட்டடம் ஆகியவற்றுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், வீடு விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.
மாவட்ட பதிவாளர்கள் வெளியிட்ட, மண்டல அளவில் வெளியான கூட்டு மதிப்புகளில், பல்வேறு பகுதிகள் விடுபட்டதாக புகார் எழுந்தது.
எனவே, விடுபட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் அடுக்கு மாடி திட்டங்களில் வீடுகளை விற்க, கூட்டு மதிப்பு நிர்ணயிக்குமாறு, கட்டுமான நிறுவனங்கள் பதிவுத்துறையில் விண்ணப்பித்தன.
இந்த கோப்புகள் கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் வீடு வாங்க முன்பணம் கொடுத்தும், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
விடுபட்ட பகுதிகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்க, அந்தந்த மண்டல டி.ஐ.ஜி.,க்களுக்கே இறுதி அதிகாரம் உள்ளது. ஆனால், பெரும்பாலான டி.ஐ.ஜி.,க்கள், இது தொடர்பான கோப்புகளை ஆய்வுக்கே எடுப்பதில்லை.
நேரில் சென்று விசாரித்தால், மாவட்ட பதிவாளரிடம் செல்லுங்கள் என்கின்றனர். அங்கு விசாரித்தால், டி.ஐ.ஜி., முடிவுக்கு காத்திருக்கிறோம் என்கின்றனர்.
அக்கம் பக்கத்தில் உள்ள மதிப்புகளை கடைப்பிடித்து, வீடு விற்பனை பத்திரத்தை பதிவு செய்யலாமா என்றால், அதற்கும் அதிகாரிகள் மறுக்கின்றனர். புதிய மனை பிரிவுகளுக்கு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பது தொடர்பாக, சில நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருவாய் முடக்கம்
அதேபோல, கட்டடங்களுக்கான கூட்டு மதிப்பு நிர்ணய விஷயத்திலும் நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அடுக்குமாடி திட்டங்களில் வீடுகளை வாங்க முன்வரும் மக்கள், பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் முடங்குகிறது. இந்த விஷயத்தில் பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.