களத்திற்கே வராத தற்குறிகள் கனவு பலிக்காது: சேகர்பாபு
களத்திற்கே வராத தற்குறிகள் கனவு பலிக்காது: சேகர்பாபு
ADDED : டிச 07, 2024 06:44 PM
கொளத்துார்:''தி.மு.க., 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெல்லும். களத்திற்கே வராத தற்குறிகளின் கனவு பலிக்காது,'' என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக பேசினார்.
துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கொளத்துார் தொகுதி தி.மு.க., சார்பில், 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தலைமை கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''மக்கள், வாழ்க்கையில் பார்க்காத பல்வேறு திட்டங்களை, தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும், சொன்ன திட்டங்களை மட்டும் அல்ல; சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி, நாட்டின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என்றார்.
பின், சேகர்பாபு அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு, பெண்களுக்காக அமல்படுத்திய திட்டங்கள், தமிழகம், இந்தியாவை தாண்டி உலகத்திற்கே வழிகாட்டுகிறது.
அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளிக் கொடுக்கும் முதல்வரை பார்த்து சிலர், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்கின்றனர்.
தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு, வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளையும் தி.மு.க., வென்று பதிலளிக்கும்.
தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இதில் பாதிப்பு ஏற்படும் என நினைப்பவர்களின் கனவு, பகல் கனவாகவே முடியும்.
'வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளிலும் தி.மு.க., வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும்' என சிலர், அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்திற்கே வராதவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
எங்களின் நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே.
வில்லிலிருந்து புறப்படும் அம்பாக தி.மு.க., மீது எப்போதெல்லாம் அவதுாறு பரப்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கி.மீ., வேகத்தில் தொண்டர்கள் பயணிப்பர். தேவையானால், அந்த வேகம் 100 கிலோ மீட்டர் வேகம் கூட செல்வர். வரும் 2026ல் தி.மு.க.,வின் தொண்டன் 100 கி.மீ., வேகத்தில் ஓடுவான்.
இவ்வாறு அவர் கூறினார்.