ADDED : பிப் 20, 2024 12:57 AM
'அரசின் கனவுகள், நாளை முதல் அனைத்தும் நனவாகும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி, தமிழகம் சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதை எடுத்து சொல்லும் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக நிதி நிலை அறிக்கைகள், நிதியை மையமாக வைத்து தயாரிக்கப்படும். இது சமநீதியை மையமாக வைத்து, தயாரான அறிக்கை.
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு, 9 சதவீத பங்கை தந்து, தமிழகத்தின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சி, 8.19 சதவீதமாக உள்ளது; பணவீக்கம் 5.97 சதவீதமாக குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக,தமிழகம் உயர்ந்துள்ளது.
புத்தாக்கத் தொழில்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இப்படி அனைத்து துறையிலும் தமிழகம் முன்னேறி வருகிறது.
இந்த பட்ஜெட், தமிழகத்தின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக, தமிழகத்தை உச்சியில் உட்கார வைப்பதாக அமைந்துள்ளது.
மத்திய அரசு, மாநிலத்தின் நிதி வளத்தை தொடர்ந்து சுரண்டுகிறது. நியாமான நிதி ஒதுக்கீடுகளையும் தர மறுத்தது. கடன் வாங்கி திட்டங்களை தீட்டுவதற்கும் தடை செய்தது. இப்படி அனைத்து பக்க நெருக்கடிகளையும் தாண்டி, இத்தகைய வெற்றியைதமிழகம் பெற்று வருகிறது.
பொருளாதார நெருக்கடி வழியாக, தமிழக அரசின் அனைத்து துறை வளர்ச்சி செயல்பாட்டை தடுக்க பார்த்தனர். தடைகளை வென்று, அனைவருக்குமான வளர்ச்சிக்கு, தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
நாளை முதல் அனைத்தும் நனவாகும். அமைச்சர்களும், துறை செயலர்களும், இந்த திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ, அதை மனதில் வைத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை, மிக சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

