158 உள்ளாட்சிகளில் குடிநீர் பாதாள சாக்கடை திட்டங்கள் 'அம்ருத்' நிதியில் விறுவிறு
158 உள்ளாட்சிகளில் குடிநீர் பாதாள சாக்கடை திட்டங்கள் 'அம்ருத்' நிதியில் விறுவிறு
ADDED : ஆக 29, 2025 04:26 AM
சென்னை: தமிழகத்தில், 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில் குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை வசதிக்கான புதிய திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுஉள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுதும், 500 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக, 'அம்ருத்' திட்டத்தை, மத்திய அரசு, 2015ல் துவக்கியது. இதில் தமிழகத்தில், 28 நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
நிதி ஒதுக்கீடு முதல் கட்ட அம்ருத் திட்டம் முடிவடைந்த நிலையில், இதன் இரண்டாம் கட்டம், 2024ல் அறிவிக்கப்பட்டது. நாடு முழுதும், 500 நகரங்களுக்கு இத்திட்டத்தில், 76,730 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
இதில் தமிழகத்துக்கு, ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதி திட்டங்களுக்காக, 4,735 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இதை கருத்தில் வைத்து, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 28 நகரங்கள் அம்ருத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டன. இரண்டாம் கட்ட திட்டத்தில், 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முன்னுரிமை இப்பகுதிகளில் முறையான குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த இருக்கிறோம். இதற்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
'நகர நீர் சமநிலை' என்ற தலைப்பில், இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதில், மாநகராட்சிகளுக்கான திட்டங்களை, தனியார் பங்கேற்புடன் செயல்படுத்த உள்ளோம்.
இதில் பெரும்பாலும் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளன. இதனால், நகர்ப்புற பகுதிகளில் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வழி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

