கூடுதலாக 3 கோடி மக்களுக்கு குடிநீர்: அ.தி.மு.க., கேள்விக்கு நேரு பதில்
கூடுதலாக 3 கோடி மக்களுக்கு குடிநீர்: அ.தி.மு.க., கேள்விக்கு நேரு பதில்
ADDED : மார் 19, 2025 05:12 AM

சென்னை:''திருவள்ளூர் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து, விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் நகராட்சிக்கு, 16 கி.மீ., தொலைவில் உள்ள வள்ளியூரில், 'போர்' போட்டு, 'பைப்லைன்' வாயிலாக குடிநீர் எடுத்து வருகிறோம். இது தற்காலிகமாக நடக்கிறது. திருவள்ளூர் நகருக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தன்னிறைவு திட்டமாக கொடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தான் வருகிறது. திருவள்ளூர் நகராட்சியை பொறுத்தவரை, 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குழாயில் குடிநீர் எடுத்து வரப்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பெரிய குழாய் அமைத்து, தண்ணீர் எடுத்து வர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்யப்படும்.
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி நடந்து வருகிறது. இதனால், அங்கு சாலைகள் தோண்டப்பட்டு உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, பணிகள் முடிவுற்ற இடத்தில் சாலை அமைக்க வேண்டும். கோடை நெருங்கும் நிலையில் பணிகளை துரிதப்படுத்தி, குடிநீர் வினியோகத்தை துவங்க வேண்டும்.
அமைச்சர் நேரு: கடந்த காலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் போது தோண்டப்படும் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால், தற்போது திட்டமிடும் போதே சாலை பணிக்கும் சேர்த்து நிதி ஒதுக்கப்படுகிறது. அங்கு, 68 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வீடுகளுக்கு இணைப்பு தரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால், சாலைகள் அமைப்பது தாமதமாகும்.
இருப்பினும், மேடு, பள்ளம் இல்லாமல், மக்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, 4.25 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் கூடுதலாக, 3 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விவாதம் நடந்தது.

