கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்,; பல்லாவரத்தில் மூவர் பரிதாப பலி
கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்,; பல்லாவரத்தில் மூவர் பரிதாப பலி
ADDED : டிச 06, 2024 06:32 AM

சென்னை: பல்லாவரத்தில் வினியோகிக்கப்பட்ட கழிவுநீர்கலந்த குடிநீர் குடித்த 40க்கும் மேற்பட்டோர், வாந்தி,பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதில், மூன்று பேர் உயிரிழந்த நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், 19 பேரும், பல்லாவரம் தனியார் மருத்துவமனையில் ஐந்து பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை பரங்கிமலை -பல்லாவரம் கன்டோன்மென்ட், ஆறாவது வார்டு மலைமேடு பகுதிக்கு நேற்று முன்தினமும், தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டு காமராஜர் நகருக்குநான்கு நாட்களுக்கு முன்னரும், பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்பட்டது. கழிவுநீர் கலந்து, நிறம்மாறி வந்த குடிநீரை குடித்த அப்பகுதிகளை சேர்ந்த பலருக்கு, நேற்று முன்தினம் இரவு, வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து அவர்களை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் துாக்கி சென்றனர். அங்கு சிலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்பினர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலையும் பலர், இதே பாதிப்புகளால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 18 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், காமராஜர் நகரைசேர்ந்த திருவீதி, 56, என்பவர் நேற்று முன்தினமும், கன்டோன்மென்ட் பல்லாவரத்தை சேர்ந்த மோகனரங்கம், 42, நேற்று காலையும் இறந்தனர். தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், 19 பேரும், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐந்து பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 40க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.
கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோரை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், அன்பரசன், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, செங்கல்பட்டு கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதற்கிடையில், வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் மாதிரிகளை சேகரித்து, கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக, சுகாதார துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
மேற்கண்ட இரு பகுதிகளிலும், மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையில், பொதுமக்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதற்கு, குடிநீர் காரணமில்லை என, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: பல்லாவரம் காமராஜர் நகர், ஆலந்துார் மலைமேடு பகுதிகளை சேர்ந்த 33 பேர், இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, புற நோயாளிகளாக வந்து சென்றுள்ளனர். இதில், 14 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்று விட்டனர்; 19 பேர், உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் இருவர் என, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இறந்துபோன திருவேதி, 56, மாங்காடு பகுதியை சேர்ந்தவர். காமராஜர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இறந்த மற்றொருவர் மோகனரங்கம், 42. இருவரும், இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அது விரைவாக முடிக்கப்படும். இதுதவிர, ஏற்கனவே படுத்த படுக்கையாக கிடந்த, 88 வயதான வரலட்சுமி என்பவரும் இறந்துள்ளார்.
திருவேதி, மோகனரங்கம் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியும். குடிநீரால் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்பதும் விரைவில் கண்டறியப்படும். இந்த மருத்துவமனையில், 30 பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மூன்று பேர் இறந்திருக்கின்றனர் என்றும், எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
இங்கு, 19 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை. மூவரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகும், குடிநீரின் மாதிரி முடிவு பரிசோதனைக்கு பிறகும் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.