ஆட்டோ மீது மான் மோதல் விபத்தில் டிரைவர் பரிதாப பலி
ஆட்டோ மீது மான் மோதல் விபத்தில் டிரைவர் பரிதாப பலி
ADDED : மார் 13, 2024 12:58 AM

கொச்சி, கேரளாவில் மருத்துவமனைக்கு பயணியரை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது, மிளா மான் மோதிய சம்பவம் அரங்கேறியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் டிரைவர் பலியானார்.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் கோத்தமங்கலம் ஒட்டியுள்ள வனப்பகுதி அருகே, நேற்று அதிகாலை ஓர் ஆட்டோவில், பயணியர் மூன்று பேரை ஏற்றிக்கொண்டு, 38 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது, அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென மிளா மான் ஒன்று சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதி விட்டு, மீண்டும் காட்டுக்குள் தப்பி ஓடியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த மூன்று பேரும் காயமின்றி தப்பினர். எனினும், படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாகவே மிளா மான், குறைந்தபட்சம் 200 முதல் 320 கிலோ எடை வரை உடையது. ஆண் மானுக்கு நீண்ட கொம்புகளும் இருக்கும்.
வேகமாக செல்லக்கூடிய விலங்கு என்பதால், குறுக்கே ஏதேனும் வாகனம் வந்தால், இதுபோன்ற நிகழ்வு தான் அரங்கேறும் என, வன ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் குறுக்கீடு அதிகளவு இருக்கும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். மான் மட்டுமின்றி, சில சமயங்களில் யானை உள்ளிட்ட விலங்குகளும் சாலையை கடந்து செல்லும் என குறிப்பிடுகின்றனர்.
இப்பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

