கண்காணிப்பு பணியில் 'ட்ரோன்' தெற்கு ரயில்வேயில் அறிமுகம்
கண்காணிப்பு பணியில் 'ட்ரோன்' தெற்கு ரயில்வேயில் அறிமுகம்
ADDED : மார் 26, 2026 03:09 AM

சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக, 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு பணியை, ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்கள், ரயில்களில் நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இருப்பினும், ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நேரடியாக சென்று, முழு அளவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருக்கிறது.
முக்கியமான இரு ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதைகளை ஒட்டிஉள்ள பகுதிகளை கண்காணிக்க, 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தி உள்ளோம். இதுபோன்ற இடங்களை, முதல்முறையாக, 'ட்ரோன்' வாயிலாக கண்காணிக்க உள்ளோம்.
சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் தேர்வு செய்யப்படும் இடங்களில் முதல்கட்டமாக, 14 ட்ரோன்களை பயன் படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு ட்ரோனும், 2 கி.மீ., துாரத்தை கண்காணிக்கும் வகையில் இருக்கும். தற்போது, ஏழு ட்ரோன்கள் வந்து விட்டன; மற்றவையும் விரைவில் வரும். அதன்பின், அதிக குற்றங்கள் நடக்கும் இடங்களை தேர்வு செய்து, ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
