ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதால் 'ட்ராப் டாக்சி ' சேவையில் 3 லட்சம் வாடிக்கையாளர்கள்
ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதால் 'ட்ராப் டாக்சி ' சேவையில் 3 லட்சம் வாடிக்கையாளர்கள்
ADDED : ஜன 19, 2025 12:39 AM

சென்னை:காரில் ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் சேவையை, சென்னையில் செயல்படும், 'ட்ராப் டாக்சி' நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில், 3 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வழி பயண கட்டணத்தால், 22 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, 'ட்ராப் டாக்சி' நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:
நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்த போது, 2013ல் வேலை நிமித்தமாக கோவை சென்றேன்.
அப்போது, என் பெற்றோர் திருச்சியில் இருந்தனர். அவர்கள், ஒரு சனிக்கிழமை மதியம், 3:00 மணிக்கு திடீரென என்னை தொடர்பு கொண்டு, உடனே திருச்சிக்கு வரும்படி கூறினர்.
உதயமானது
கோவையில் இருந்து அவர்களை சந்திக்க, ரயிலில் செல்ல நினைத்தேன்; மதிய நேரத்தில் ரயில் இல்லை; ஆம்னி பஸ்சும் கிடைக்கவில்லை. அரசு பஸ்சில், 200 கி.மீ., செல்ல, 5 மணி நேரமாகும் என்றனர். டாக்சியில் செல்ல, ஒரு டிரைவரை அழைத்தேன்.
'உங்களை இறக்கி விட்டு, திரும்பி வரும் போது சவாரி இருக்காது; காலியாகவே வண்டி வரணும். அதனால், 200 கி.மீ., போவதற்கும், 200 கி.மீ., திரும்பி வருவதற்கும் சேர்த்து, 400 கி.மீ.,க்கு பணம் தர வேண்டும்' என்றார்.
அதற்கு, 'திரும்பி வரும் போது, ஒரு சவாரிக்கு ஏற்பாடு செய்கிறேன்; நான் வந்ததுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் தானே' என்றேன். 'அப்படி செய்தால், அனைவருக்கும் நல்லது தானே' என்றார் டிரைவர். இருப்பினும், நான் டாக்சியில் செல்லவில்லை.
அன்றே, ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் வகையில் டாக்சி சேவை இருக்க வேண்டும் என்ற விதை, என் மனதில் உதயமானது.
இதற்காக, நவீன தொழில்நுட்பம், தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில், டாக்சி சேவையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தால், 2014ல், 'ட்ராப் டாக்சி'யை துவக்கினேன்.
இதன் வாயிலாக, டாக்சி டிரைவர்களை இணைத்து, வாடிக்கையாளர்களிடம் ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் வசதியை அறிமுகம் செய்தேன்.
டீசல் செலவு தந்தோம்
வாடிக்கையாளர்கள் எவ்வளவு துாரம் செல்கிறார்களோ, அந்த ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
'டிராப் டாக்சி'யில், டிரைவர்கள் தங்களின் டாக்சியை பதிவு செய்தனர். அவர்களுடன், வாடிக்கையாளர்களை இணைத்து, ஒரு வழி பயணத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வகையில் சேவையை துவக்கினோம்.
ஆரம்பத்தில், ஒரு வழி பயணத்தில் வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு, திரும்ப வரும் டிரைவர்களுக்கு மீண்டும் சவாரி தருவதில், நிறைய சவால்கள் இருந்தன. இதனால், டிரைவருக்கான பெட்ரோல், டீசல் செலவையும், டிராப் டாக்சியே வழங்கியது.
பின், ஒரு வழி பயணத்துக்கு மட்டும் பாதி கட்டணம் வசூலிப்பதால், நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தற்போது, டிராப் டாக்சியில், 1,500 டாக்சிகளும், 3 லட்சம் வாடிக்கையாளர்களும் இணைந்துள்ளனர்.
தமிழகம் முழுதும் சேவை வழங்குகிறோம். கர்நாடகா மாநிலம் பெங்களூரு; ஆந்திராவில் திருப்பதி, சித்துார், நெல்லுார்; கேரளாவில் உள்ள விமான நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு, 'ட்ராப் டாக்சி' சேவை கிடைக்கிறது.
குறைந்த கட்டணம் மட்டும் அல்லாமல், வாடிக்கையாளரின் பாதுகாப்பான பயணத்துக்கும் வழிவகை செய்யப்படுகிறது. இதற்காக, டாக்சி மற்றும் டிரைவர், உரிமையாளரின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் தான், எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்யப்படுகிறது.
டாக்சிக்கு ஆண்டுதோறும் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக, ஒரு மாதம் முன்பே டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ரூ.22 கோடி சேமிப்பு
காப்பீடு புதுப்பிக்கப்பட்ட விபரத்தை காட்டிய பின் தான், மீண்டும் டாக்சி பதிவு செய்யப்படும். இவ்வாறு, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
டிரைவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் நிறுவனத்தின் சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, அனைத்து வகையான டாக்சிகளையும் வழங்குகிறோம்.
நம்பிக்கையான பயண சேவையால், 10 ஆண்டுகளில், 3 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளோம். அவர்களுக்கு ஒரு வழி பயணத்தால் இதுவரை, 22 கோடி ரூபாயை சேமித்து கொடுத்துஉள்ளோம்.
கட்டண விபரங்களை, 'www.droptaxi.in' என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். போன் மற்றும், 'வாட்ஸாப்'க்கு, 79992 22000 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

