UPDATED : நவ 29, 2026 07:02 PM
ADDED : நவ 29, 2026 07:02 PM

பெரம்பலுார்: பெரம்பலுாரில், பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்கள், தண்ணீரின்றி சேதமாகின.
பெரம்பலுார் மாவட்டத்தில், இந்தாண்டு இயல்பை விட மிகக்குறைவாக மழை பெய்துள்ளது. இதனால், மாவட்டம் முழுதும், மானாவாரி சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2.5 லட்சம் ஏக்கர் மக்காசோளம் சாகுபடி செய்து, மாநில அளவில் முதலிடத்திலுள்ள இம்மாவட்டத்தில், பெரம்பலுார், வேப்பூர் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்துார் என, நான்கு ஒன்றியங்களிலும் மழையின்றி வறட்சியால், பல்லாயிரம் ஏக்கர் மக்காசோளம் பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகி, தற்போது, கால்நடைகளுக்கு தீவனமாகி வருகிறது
கதிர்விடும் பருவத்தில் பருவமழை பொய்த்து போனதால், மக்காசோள கதிர்கள் அனைத்தும் மணிபிடிக்காமல் பதராகி போனதால், விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துள்ளனர். இதனால், ஏக்கருக்கு, 30 முதல், 35 ஆயிரம் வரை கடன் வாங்கி, செலவு செய்து அறுவடையை எதிர்நோக்கி காத்திருந்த விவசாயிகள், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேரளி, சித்தளி, உட்பட, பல்வேறு கிராம விவசாயிகள், மக்காசோள பயிர்களை கால்நடை தீவனத்திற்காக, டன், 2,500 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். இந்நிலையில், ‘நிவாரணம் வழங்க வேண்டும்’ என அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
