போதை ஆசாமி வங்கிக் கணக்கில் 3.25 கோடி ரூபாய்; சாராயக்கடையில் சல்லடை போட்ட தமிழக போலீஸ்
போதை ஆசாமி வங்கிக் கணக்கில் 3.25 கோடி ரூபாய்; சாராயக்கடையில் சல்லடை போட்ட தமிழக போலீஸ்
ADDED : ஏப் 15, 2025 07:14 AM

புதுச்சேரி: தமிழக சைபர் கிரைம் போலீசார், 3.25 கோடி மோசடி வழக்கில், பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளரை தேடி புதுச்சேரி வந்தனர். அந்த நபரின் மொபைல் போன் சிக்னலை போலீசார் பின் தொடர்ந்து, நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள சாராயக்கடைக்கு சென்றனர்.
அங்கு, போனை டயல் செய்தபோது, போதையில் மயங்கி கிடந்த நபரின் சட்டையில் போன் ஒலித்தது. அந்த நபரை போலீசார் பிடித்தனர். போதை ஆசாமியிடம், 'நாங்கள் தமிழக சைபர் கிரைம் போலீஸ். உன்னை 3.25 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்கிறோம்' என்று கூற, அந்த ஆசாமி, 'நான் 10 ரூபாய்க்கு வழியில்லாமல் சாராயக்கடையில் படுத்து கிடக்கிறேன். நீங்க காமெடி பண்றீங்க...' என்றார்.
பின், தமிழக போலீசார் அவரிடம் முழு விசாரணை நடத்திய போது, திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. 'குடி'மகன் சில மாதங்களுக்கு முன் சாராயம் குடிக்க பணமின்றி, சாராயக்கடையில் சுற்றி வந்த போது, அங்கு வந்த நபர், அவருக்கு சாராயம் வாங்கி கொடுத்துள்ளார்.
பின், அந்த நபர், அவ்வப்போது சாராயம் வாங்கி கொடுத்து, அடுத்த சில தினங்களுக்கு பின் அந்நபர், குடிமகனிடம் புதிய தொழில் துவங்க போவதாகவும், ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் கொடுத்தால், மாதம், 1,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
அதை நம்பிய குடிமகன், தன் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகலை கொடுத்துள்ளார். அது தற்போது வினையாகி உள்ளது. இவரது வங்கிக் கணக்கில், மோசடி நபரால் ரூ.3.25 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. தமிழக போலீசார், புதுச்சேரி குடிமகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
* பொதுமக்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை (ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பிற ஆவணங்களை) பயன்படுத்தி பழக்க வழக்கத்தின் பேரில் எவருக்கும் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தரக்கூடாது.
* வங்கி கணக்கை கொடுத்தால் மாதம் தோறும் பணம் தருவதாக யாரேனும் கூறினால், அதனை நம்ப வேண்டாம். அடையாளம் தெரியாதவர்களிடம் உங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை கொடுத்தால், அதனை அவர்கள் 'டார்க் நெட்' இணையதளத்திற்கு பெரும் தொகைக்கு விற்றுவிடுவர்.
* அந்த வங்கி கணக்குகளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தினால், நீங்கள் கைதாக நேரிடும். இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களிடம் வங்கி கணக்குகளை வாடகைக்கு வாங்கி, சைபர் குற்றவாளிகளுக்கு விற்பது அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உஷராக இருக்க வேண்டும்.
* சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் தகவல் பெற விரும்புவோர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 அல்லது 0413 2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது https://cybercrime.gov.in/என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.